இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம், இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் ஆக்ரோஷமான பந்துவீச்சுக்குப், பின்னர் அவருக்கு விதிக்கப்பட்டதாள் ரசிகர்கள் அதிர்ச்சி. தனது பந்துவீச்சின் மூலம் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திக்குமுக்காடச் செய்த சிராஜ், விக்கெட்டுகள் வீழ்த்திய பிறகு அவரது கொண்டாட்ட விதிகள் மீறியதால் அபராதம் விதிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் பென் டக்கெட்டை அவுட்டாக்கிய விக்கெட் முக்கியமானதாக அமைந்தது. சிராஜ் வீசிய பந்து டக்கெட்டின் பேட்டில் பட்டு, நேராக ஜஸ்பிரித் பும்ராவிடம் கேட்ச் ஆனது. இந்த விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சிராஜ் ஆக்ரோஷமாக டக்கெட்டை நோக்கிச் சென்று அவரது தோளில் மோதி, தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் களத்தில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. அதேபோல், ஆலி போப் விக்கெட்டையும் சிராஜ் வீழ்த்தினார். பந்துவீச்சுக்கு மட்டுமல்லாமல், களத்தில் தனது உடல்மொழியாலும் எதிரணி பேட்ஸ்மேன்களை சீண்டும் வகையில் சிராஜ் செயல்பட்டார்.
அபராதம் !
முகமது சிராஜின் ஆக்ரோஷமான கொண்டாட்டம் ஐசிசி நடத்தை விதிகள் (ICC Code of Conduct) 2.5 பிரிவை மீறியதாகக் கருதப்பட்டது. இந்தப் பிரிவு, “சர்வதேச போட்டியில் ஒரு பேட்ஸ்மேன் அவுட்டாகும் போது, அவரை இழிவுபடுத்தும் அல்லது ஆக்ரோஷமான எதிர்வினையைத் தூண்டும் மொழி, செயல்கள் அல்லது சைகைகளைப் பயன்படுத்துதல்” குறித்து பேசுகிறது. பென் டக்கெட்டின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு சிராஜ், டக்கெட்டை நோக்கி நெருக்கமாகச் சென்று தனது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தியது இந்தப் பிரிவை மீறியதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, முகமது சிராஜுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15% அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவரது ஒழுங்குமுறைப் பதிவில் ஒரு டீமெரிட் புள்ளியும் சேர்க்கப்பட்டது. கடந்த 24 மாதங்களில் சிராஜுக்கு விதிக்கப்படும் இரண்டாவது அபராதம் இதுவாகும். ஏற்கனவே, 2024 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் ஒரு டீமெரிட் புள்ளியைப் பெற்றிருந்தார். ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட டீமெரிட் புள்ளிகளைப் பெற்றால், அது இடைநீக்கப் புள்ளிகளாக மாற்றப்பட்டு, அந்த வீரர் விளையாடத் தடை செய்யப்படுவார்.

முகமது சிராஜின் பந்துவீச்சுத் திறன் மற்றும் அவரது களத்தில் வெளிப்படுத்தும் ஆக்ரோஷம் பாராட்டுக்குரியது என்றாலும், ஐசிசி விதிகளைப் பின்பற்றுவதும், களத்தில் அமைதியைப் பேணுவதும் வீரர்களுக்கு அவசியம் என்பதை இந்த அபராதம் மீண்டும் ஒருமுறை உணர்த்துகிறது. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் “டிஎஸ்பி சிராஜ்” என்று கொண்டாடும் அளவிற்கு அவரது ஆக்ரோஷம் இருந்தாலும், அது விதிகளை மீறாமல் இருக்க வேண்டியது முக்கியம்.





