அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடர்ந்து தொடங்க இன்னும் சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியானது நடக்கிறது. மேலும் இந்த போட்டியானது 50 ஓவர்களாக நடப்பதினால் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அதில் கலந்து கொள்ளும் ஆசிய அணிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆசிய கோப்பை 2023 தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு சென்ற இந்தியா நாளை இலங்கையின் கொழும்பு நகரில் பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது. இந்த தொடரில் லீக் சுற்றில் மோதிய போது பந்து வீச்சில் தெறிக்க விட்ட பாகிஸ்தான் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை திண்டாட வைத்தது. ஆனால் அப்போது மழை வந்ததால் ரத்து செய்யப்பட்ட போட்டியின் முடிவில் இரு அணிகளுமே சமமாக மோதிக் கொண்டார்கள் என்றே சொல்லலாம்.
எனவே அந்தப் போட்டியில் மழையால் தவற விட்ட வெற்றியை இம்முறை மீண்டும் சிறப்பாக செயல்பட்டு பெறப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அந்த நிலையில் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை தோற்கடித்ததால் கிடைத்த மிகப்பெரிய தன்னம்பிக்கையை பயன்படுத்தி இம்முறை 100% சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்தியாவின் தோற்கடிப்போம் என்று கேப்டன் பாபர் அசாம் கடந்த சில தினங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற முடிந்த இலங்கை பிரிமியர் லீக் தொடரில் தங்களுடைய பெரும்பாலான வீரர்கள் விளையாடியதாக பாபர் அசாம் கூறியுள்ளார். அதாவது இந்தியாவை விட இலங்கை மண்ணில் சமீப காலங்களில் அதிகமாக விளையாடி அங்குள்ள கால சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளதால் இந்த சூப்பர் 4 போட்டியில் தங்களுக்கே அதிக சாதகம் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த அனுபவத்தை பயன்படுத்தி இந்த போட்டியில் இந்தியாவை தோற்கடிப்போம் என்று மீண்டும் உறுதியான நம்பிக்கையை தெரிவிக்கும் அவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “பாகிஸ்தான் மற்றும் இலங்கை மண்ணில் எங்களுக்கு கிடைத்த தொடர்ச்சியான கிரிக்கெட்டில் நாங்கள் அதிகமாக விளையாடியுள்ளோம். அதன் அடிப்படையில் இந்தியாவை விட எங்களுக்கு அதிக சாதகம் இருக்கிறது என்று சொல்லலாம்”
“குறிப்பாக கடந்த இரண்டரை மாதங்களாக நாங்கள் இலங்கையில் தொடர்ந்து விளையாடி வருகிறோம். அதாவது சமீபத்தில் இங்கு டெஸ்ட் தொடரிலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் விளையாடிய நாங்கள் எல்பிஎல் தொடரிலும் விளையாடினோம். எனவே அது எங்களுக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தும் என்று உறுதியாக சொல்வேன்” என்று கூறினார். இந்த நிலைமையில் இப்போட்டியிலும் மழை பெய்வதற்கு 90% வாய்ப்பிருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



