இந்த வருட ஐபிஎல் சீசனில் பல பிரமாதமான தொடக்க வீரர்களை ரசிகர்கள் பார்த்தார்கள். குறிப்பாக சொல்லவேண்டும் என்றார் ஆர்சிபி அணியின் விராட் கோலி மற்றும் ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ, சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டேவின் கான்வே. ராஜாதான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் குஜராத் அணியின் சுப்மன் கில் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டார்கள். மேலும் இந்த சீசனில் சுப்மன் கில் 890 ரன்களை விளாசினார்.

அப்படிப்பட்ட நிலையில் தான் இந்த ஐபிஎல் சீசனில் வெற்றியடைந்த அணியில் இருக்கும் 26 வயதாகும் ருதுராஜ் கெய்க்வாட் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகக் கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம். இந்த ஐபிஎல் சீசனில் 590 ரன்களை விளாசியுள்ளார். மேலும் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் கெய்க்வாட் விரைவாக 26 ரன்கள் எடுத்தார் அது சென்னை அணிக்கு மிகப்பெரிய சேஸிங்கில் சிறப்பான தொடக்கத்தை வழங்கினார்.
இந்நிலையில் வாசிம் அக்ரம் சமீபத்திய பேட்டியில் பேசுகையில் “அவர் அழுத்தத்தில் இருந்தாலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடைய முக்கியமான ஒரு பிளஸ் என்னவென்றால் அவர் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறார். அவர் ஒரு சிறந்த பீல்டர் மற்றும் இளமையான வீரராகவும் இருக்கிறார். கெய்க்வாடுக்கு இந்திய கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் போன்ற போட்டிங்களில் கண்டிப்பாக பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்று பாராட்டினார் வாசிம் அக்ரம்.

சமீபத்தில் முடிவடைந்த ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணிக்காக கெய்க்வாட் 42.14 சராசரியுடன் 590 ரன்களை குவித்தார். மேலும் அவர் நான்கு அரை சதங்களை இந்த சீசனில் அடித்துள்ளார். அதன் மூலம் பல ஆட்டங்களில் சென்னை அணியை வெற்றிபெறச் செய்தார். கெய்க்வாட் சிஎஸ்கே அணிக்காக 52 போட்டிகளில் விளையாடி 135.52 ஸ்ட்ரைக் ரேட்டில் 1797 ரன்கள் குவித்துள்ளார். ருதுராஜ் இதுவரை ஐபிஎல்லில் 14 அரை சதங்கள் மற்றும் ஒரு சதத்துடன் சேர்த்து 39.07 சராசரியில் ரன்களை எடுத்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் கெய்க்வாட்க்குப் பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் காத்திருக்கும் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார். ஏனென்றால் கெய்க்குவாட் தனது நீண்ட நாள் காதலியான உத்கர்ஷா பவாரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார். அவரது திருமணத்தின் காரணமாக, WTC இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் கெய்குவாட் இடம் பெறவில்லை.





