அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மதம் 5ஆம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால் அதற்கு முன்பாகவே ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரானது ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய கண்டத்தைச் சேர்ந்த அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடைபெறும் இத்தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

அந்த அணியில் காயம் காரணமாக விலகியிருந்த கேஎல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற காரணத்திற்காக திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதே போல குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ரவீந்திர ஜடேஜா ஆகிய ஸ்பின்னர்கள் அனைவருமே இடது கை அல்லது லெக் ஸ்பின்னர்களாக இருப்பதால் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை என்ற கட்டாயத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
மேலும் ஆசிய கண்டத்தின் சூழ்நிலைகளில் அசத்தக்கூடிய அஸ்வின் எதிரணியில் இருக்கும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுப்பார் என்பதால் தாமாக இருந்தால் நிச்சயம் தேர்வு செய்வேன் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஆசிய கோப்பை அணியில் தேர்வு செய்யப்படாத அஸ்வின் 2023 உலகக்கோப்பையிலும் கழற்றி விடப்படுவார் என்றே சொல்லலாம்.

ஒரு காலத்தில் 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக அசத்தி 2011 உலகக்கோப்பை, 2023 சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவரை நாளடைவில் வெளிநாடுகளில் சரிப்பட்டு வர மாட்டார் என்ற கண்ணோட்டத்துடன் விராட் கோலி கழற்றி விட்டதை தற்போதைய கேப்டன் ரோகித் சர்மாவும் பின்பற்றி வருகிறார். குறிப்பாக 712 விக்கெட்கள் எடுத்து ஜாம்பவானாக இருந்தாலும் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் சரியாக மதித்து நடத்தப்படுவதில்லை என்று விமர்சிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“712 சர்வதேச விக்கெட்களை எடுத்துள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் இன்னும் எதை நிரூபிக்க வேண்டும்? சீனியர் வீரராக இருந்தும் அவர் இந்திய அணியில் சிறப்பாக மதிக்கப்படுவதில்லை. நல்ல தரமான வீரரான அவர் இந்த ஆசிய கோப்பையில் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக இந்திய மைதானங்களில் நடைபெறும் 2023 உலகக்கோப்பையில் அவர் முக்கிய வீரராக இருப்பார்” என்று கூறினார்.

மேலும் முன்னாள் வீரர் மதன் லால் கூறுகையில் “ஆஸ்திரேலியா குல்தீப் யாதவை சிறப்பாக எதிர்கொண்டனர். அதனால் மேட்ச் வின்னிங் பவுலரான சஹால் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டும். அதே போலவே 500 – 600க்கும் மேற்பட்ட விக்கெட்களை எடுத்துள்ள அஸ்வினுக்கு எப்படி முக்கிய தொடர்களில் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்பது நன்றாக தெரியும். அப்படி இருந்தும் அவரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஏன் எடுக்கவில்லை என்பதை அணி நிர்வாகம் தான் அறிவார்கள்” என்று கூறினார்.



