உலக கோப்பை 2023 தொடங்க இன்னும் சில வாரங்களே இருக்கும் நிலையில் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 30 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் கராச்சியில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் இந்தியாவில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக் கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் வகையில் 50 ஓவர் போட்டிகளாக நடக்கும் இத்தொடரின் முதல் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள பாகிஸ்தான் மற்றும் நேபாள் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்வதாக கூறினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு பக்கார் ஜமான் 14 (20) ரன்களில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் நேபாள் வீரர் ரோகித் பௌடலின் சிறப்பான ரன் அவுட்டால் 5 (14) ரன்களில் பெவிலியன் திரும்பினார்.
இருந்த போதிலும் அற்புதமாக விளையாடியபாபர் அசாம் 151 ரன்களையும், இப்திகார் அகமது 109 ரன்களையும் அடித்தனர். இதனால் 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்களை குவித்தது பாகிஸ்தான் அணி. இதற்கு பிறகு இந்த மேக ரன் துறத்தலில் இறங்கிய நேபாளம் தடுமாற 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 238 ரன்கள் ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் கூறுகையில் “இந்த போட்டியில் நான் பேட்டிங் செய்ய சென்றபோது பந்து சரியாக பேட்டுக்கு வரவில்லை. ஆனால் அதன் பிறகு ரிஸ்வான் உடன் இணைந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டும் என்று நினைத்தேன்.

அந்த வகையில் நானும் அவரும் மிகச் சிறப்பாக விளையாடினோம். ரிஸ்வான் சிறப்பாக விளையாடியது எனக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தது. பின்னர் அவர் ஆட்டம் இழந்து வெளியேறியதும் இப்திகார் அகமது சிறப்பாக விளையாடினார். அவர் உள்ளே வரும்போது நான் உங்களுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடுங்கள் என்று கூறினேன். அவரும் ஒரு இரண்டு மூன்று பவுண்டரிகளுக்கு பிறகு மிகவும் கச்சிதமாக விளையாடினார்.

அதேபோன்று இன்றைய போட்டியில் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் என அனைவருமே மிகச் சிறப்பாக பந்து வீசினர். இந்த வெற்றி எங்களுக்கு ஒரு நல்ல நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. அடுத்து வரும் இந்தியா பாகிஸ்தான் போட்டி மிகப் பெரிய எதிர்பார்ப்பு எட்டியுள்ளது. நிச்சயம் அந்த போட்டியிலும் நாங்கள் எங்களுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என பாபர் அசாம் இந்திய அணிக்கு சவால் விடும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.




