அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் உலக கோப்பை 2023 தொடர்ந்து தொடங்க இன்னும் சில காலம் மட்டுமே இருக்கும் நிலையில் அதற்கு முன்னதாக ஆசிய கோப்பை போட்டியானது நடக்கிறது. மேலும் இந்த போட்டியானது 50 ஓவர்களாக நடப்பதினால் உலக கோப்பை தொடருக்கு முன்னதாக அதில் கலந்து கொள்ளும் ஆசிய அணிகளுக்கு நல்ல பயிற்சியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் முடிவில் நேபாள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில் இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அதைத்தொடர்ந்து செப்டம்பர் 6ஆம் தேதி துவங்கிய சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் வங்கதேசத்தை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்ட பாகிஸ்தான் 7 விக்கெட் எளிதான வெற்றி பெற்றது.
கடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் எதிர்பார்த்தது போலவே பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சில் போராடி 38.4 ஓவரில் 193 ரன்ளுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிகர் ரஹீம் 64 ரன்களும் கேப்டன் சாகிப் அல் ஹசன் 53 ரன்களும் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 4 விக்கெட்களையும் நாசீம் ஷா 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 194 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு பக்கார் கேப்டன் ஜமான் 20 ரன்களும் கேப்டன் பாபர் அசாம் 17 ரன்களில் அவுட்டாக்கி ஏமாற்றத்தை கொடுத்தாலும் மற்றொரு தொடக்க வீரர் இமாம்-உல்-ஹக் 78 ரன்களும் முகமது ரிஸ்வான் 63* ரன்களும் எடுத்து 39.3 ஓவரிலேயே எளிதான வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். இந்நிலையில் இந்த போட்டிக்கு பிறகு பேசிய பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் இந்திய அணிக்கு எதிராக 100% செயல்பாடுகளை வெளிப்படுத்துவோம் என்று கூறியிருந்தார்.
பாபர் அசாம் கூறுகையில் “இன்றைய நாளில் அதிக வெப்பம் இருந்தும் எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர். முதலில் ஷாஹீன் பின்னர் ஹரிஷ் ரவூப் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினர். மேலும் இப்போட்டியின் பிட்ச்சை பார்த்த பின் நாங்கள் பகிம் அஸ்ரப்பை தேர்வு செய்ய முடிவை எடுத்தோம்.

அத்துடன் இப்போட்டியில் எங்களுக்கு எப்போதும் போல சொந்த ரசிகர்களின் ஆதரவு அதிகமாகவே இருந்தது நாங்களும் அவர்களை மகிழ்வித்திருப்போம் என்று நம்புகிறேன். இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது. அதனால் நாங்கள் எப்போதுமே மிகப்பெரிய போட்டிகளுக்கு தயாராக இருக்கிறோம். எனவே இந்தியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் எங்களுடைய 100% செயல்பாடுகளை கொடுத்து வெற்றி பெறுவோம்” என்று கூறினார்




