உலக கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 5 ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கியது. இந்த முறை உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெற்று வருவதால் இந்திய ரசிகர்கள் பெரும் உச்சத்தில் இருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த தொடரின் 12வது லீக் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்று இருந்தது.

அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது முதலில் பந்து வீசிய இந்தியாவுக்கு பதில் சொல்ல முடியாத பாகிஸ்தான் சுமாராக செயல்பட்டு 42.5 ஓவரில் வெறும் 191 ரன்களுக்கு சுருண்டது. அதைத் தொடர்ந்து 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி தலா 6 பவுண்டரி சிக்சருடன் 86 (63) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். இதனால் இந்தியா 30.3 ஓவரிலேயே வென்றது.
இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா ரோஹித் சர்மாவை புகழ்ந்து பேசியுள்ளார் அவர் கூறுகையில் “சிறிய இலக்கை நோக்கி விளையாடும் போது நீங்கள் சில நேரங்களில் சிக்கிக்கொள்ளலாம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 2/3 என இருந்தது. ஆனால் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக ரோஹித்தின் பேட்டிங் துணி துவைப்பது போல இருந்தது.

அவர் எல்லா இடங்களிலும் சிக்ஸர்களை விளாசினார், அதுவும் ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப் மற்றும் ஹசன் அலி போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக.அவர்கள் மிகவும் ஒழுக்கமான மற்றும் திறமையான பந்துவீச்சாளர்கள். ஆனால் ரோஹித் அவர்களை நடைபாதையில் விளையாடும் பந்துவீச்சாளர்கள் போல் ஆக்கினார். மேலும் நேற்று போட்டியில் பந்துவீச்சாளர்களிடையே ஜனநாயக முறையில் ஐந்து பந்துவீச்சாளர்கள் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
அணியில் ஷர்துலின் பங்கு பற்றி ஒரு பெரிய கேள்விக்குறி உள்ளது – அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார். இதை இந்திய அணி மறுபரிசீலனை செய்ய வேண்டும். தோல்விகள் அனைவருக்கும் கற்பிக்கின்றன, ஆனால் வெற்றிகளில் இருந்து கற்றுக்கொண்டு சிறந்து விளங்குபவர்கள் சாம்பியன்கள் என்று கூறியுள்ளார் ஆகாஷ் சோப்ரா. இந்நிலையில் இந்திய வரும் 19ஆம் தேதி பங்களாதேஷ் அணியுடன் மோதுவது குறிப்பிடதக்கது.



