வெஸ்ட் இண்டீஸ் சுற்று பயணத்திற்கு பிறகு இந்தியா அடுத்ததாக அயர்லாந்து vs இந்தியா டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. அதற்கு பிறகு இந்திய அணியானது ஆசிய கோப்பையில் விளையாட இருக்கிறது. மேலும் அதை தொடர்ந்து இந்தியா உலக கோப்பையில் பங்கு பெற இருக்கிறது. இந்நிலையில் இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் பும்ரா மீண்டும் இந்தியா அணிக்கு திரும்ப இருக்கிறார்.

இருப்பினும் 11 மாதங்களாக குணமடைந்துள்ள பும்ரா 2023 ஆசிய மற்றும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு பலத்தை சேர்ப்பார் என்று எதிர்பார்ப்பதாக ராகுல் ட்ராவிட், ரோஹித் சர்மா சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இத்தொடரில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் களமிறங்கும் தாம் அபாரமாக செயல்படுவேன் என்று அனைவரும் எதிர்பார்த்தால் அது அவர்களுடைய பிரச்சனை என்று தெரிவிக்கும் பும்ரா காயத்திலிருந்து குணமடைந்த பின் முதல் முறையாக நிகழ்ந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு.
நீண்ட காலமாக என்சிஏவில் இருந்து கடினமாக உழைத்து தற்போது வந்துள்ளதில் மகிழ்ச்சியடையும் நான் அடுத்து வரும் போட்டிகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். சில விஷயங்கள் எப்போதும் உங்களது கைகளில் இருக்காது. உங்களுடைய உடலுக்கு தேவையான மதிப்பை கொடுத்து அது குணமடைவதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். ஆனால் அது உங்களுக்கு பசியையும் ஏற்படுத்தும்.

மேலும் என்னுடைய உடல் குணமடைந்ததும் என்னால் இன்னும் சிலவற்றை எக்ஸ்ட்ரா செய்ய முடியும் என்பதை உணர்ந்தேன். என்சிஏ மட்டுமல்லாமல் குஜராத்தில் இருக்கும் என்னுடைய வீட்டிலும் நான் பயிற்சிகளை செய்தேன். அதனால் தற்போது எந்த எல்லையும் இல்லாமல் நான் நன்றாக உணர்கிறேன். பொதுவாக நீங்கள் காயத்தை சந்திக்கும் போது அது விரக்தியை ஏற்படுத்தும். அப்போது நீங்கள் உங்கள் மீது சந்தேகப்படாமல் கம்பேக் கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
என்னுடைய உடல் மீது நம்பிக்கை வைத்த நான் சோதனை காலங்களிலும் கிரிக்கெட் வாழ்கை முடிந்துவிட்டது என்று நினைத்தது கிடையாது. மாறாக நேர்மறையாக இருந்து குணமடையும் விரும்பினேன். விமர்சிப்பவர்களின் கருத்தை எடுத்து கொண்டாலும் அது நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் அதை நான் மனத்தில் எடுத்து கொள்வேன். தற்சமயத்தில் என் மீது எனக்கு எவ்விதமான பெரிய எதிர்பார்ப்புகளும் கிடையாது.

நீண்ட காலம் கழித்து வந்துள்ளதால் இந்த தருணங்களில் மகிழ்ச்சியுடன் விளையாட விரும்புகிறேன். இந்த சமயத்தில் என்னால் அதிகமாக பங்காற்ற முடியும் என்று நான் நினைக்கவில்லை. நான் சிறிய எதிர்பார்ப்புடன் தான் வந்துள்ளேன். ஒருவேளை மற்றவர்கள் என்னிடம் அதிகமாக எதிர்பார்த்தால் அது அவர்களுடைய பிரச்சினையாகும். இப்போதும் நான் அதே நபராகவே இருக்கிறேன். என்னுடைய திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கிறேன் என்றார் பும்ரா.




