உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5ஆம் தேதி இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு உச்சகட்டமாக காணப்படுகிறது.

முன்னதாக 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் துவங்கி 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் மட்டுமின்றி 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரை சமீப காலங்களில் நாக் அவுட் போட்டிகளில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியது முக்கிய காரணமாக இருந்து வருகிறது. எனவே இம்முறை கோப்பையை வெல்ல வேண்டுமெனில் டாப் ஆர்டரில் விளையாடும் ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி ஆகியோர் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.
உலக கோப்பை 2023 தொடருக்கான இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியான நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த தேர்வு உலக கோப்பைக்கு சரியாக இருக்குமா என்று கேள்வியை பலர் கேட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரரான முகமது கைஃப் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ராகுல் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் “ஜஸ்பிரித் பும்ராவுக்கு என்ன நடந்தது என்பதை இந்தியா பார்த்தது, அங்கு அவர் NCA ஆல் மீண்டும் கிரிக்கெட் விளையாட தகுதியுடையவர் என்று அனுமதிக்கப்பட்டார், ஆனால் அவர் மீண்டும் காயமடைந்தார். எனவே இந்திய அணியின் தேர்வாளர்கள் ஐயர் மற்றும் ராகுல் ஆகியோருடன் கவனமாக இருக்க வேண்டும், மேலும் அவர்கள் எவ்வளவு விளையாட வேண்டும், எப்போது எடுக்க வேண்டும் என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
முக்கியமான போட்டிகள் தொடங்கும் முன் நீங்கள் அவர்களுக்கு அதிக பணிச்சுமை கொடுக்க விரும்பவில்லை. அதனால்தான் ராகுல் டிராவிட் மற்றும் பயிற்சியாளர்கள் அங்கு உள்ளனர். ராகுல் மற்றும் ஐயர் இருவரும் இந்திய அணியின் மிடில் ஆர்டரின் முதுகெலும்பு என்பதையும், அவர்களுக்கு ஆட்ட நேரம் தேவை என்பதையும் ராகுல் டிராவிட் அறிவார். இஷான் நன்றாக விளையாடினார், அணியில் ஆரோக்கியமான போட்டி இருப்பதால் அது நல்லது.

ஆனால் ஃபார்ம் இருக்கும் பிளேயர் வெளியே அமர்ந்தார் அது ஒரு பிரச்சனையாக மாறலாம், ஏனென்றால் 5-வது இடத்தில் ராகுல் பேட்டிங் செய்வதைப் பார்க்க டிராவிட் விரும்புவார். அவர் நம்பர் 5 இல் நல்ல எண்களில் ரன்களை எடுத்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் உலகக் கோப்பை ஆட்டத்தில் விளையாடும் போது அவருக்கும் ஐயருக்கும் ஆட்ட நேரம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள் என்றும் கூறியுள்ளார் முகமது கைப்.



