அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் துவங்குகிறது. இதனிடையே இந்திய அணியானது கடந்த 10 ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் வெற்றியடையாமல் இருந்து வருகிறது. குறிப்பிடத்தக்க வகையில் இந்தியா கடைசியாக தோனியின் கேப்டன்சியில் கடந்த 2013 ஆம் ஆண்டு உலக சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற்றது.

ஆனால் அதற்கு பிறகு ஐசிசி வெற்றி என்பது வெறும் கனவாகவே இந்திய அணிக்கு இருந்து வருகிறது. ஆனால் இந்த வருட உலக கோப்பை போட்டியானது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய அணியில் கடந்த 2011 உலககோப்பை போல இந்த முறையும் வென்று 10 வருடங்களாக ஐசிசி தொடரில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்தியா. இந்நிலையில் தான் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயப் அக்தர் இந்திய அணியின் கேப்டன்சி குறித்து பேசியுள்ளார்.
அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறுகையில் “ஒரு காலத்தில் ஒட்டுமொத்த அணியின் அழுத்தத்தையும் தன்மீது சுமக்கும் ஒரு வீரர் இருந்தார் – அவர் தான் தோனி. ஒரு கேப்டனால் மட்டுமே ஒட்டுமொத்த அணியையும் தனக்குப் பின்னால் பாதுகாக்க முடியும். ரோஹித் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் தான், ஆனால் அவர் கேப்டன்சியின் போது முடமாகிவிடுகிறார், அவர் பீதியடைகிறார். இவை கடுமையான வார்த்தைகளாக இருக்கலாம், ஆனால் அவர் கேப்டன் பதவியை ஏற்றிருக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

விராட் கோலி கூட அவரைப் போல் திறமையானவர் அல்ல என்று அக்தர் தொடர்ந்தார். மேலும் கூறுகையில் அவர் வைத்திருக்கும் ஷாட்டுகளுக்கு உண்டான நேரமும், அவர் விளையாடக்கூடிய ஷாட்களும் அவர் ஒரு கிளாசிக்கல் பேட்டர் என்று கூறுகிறது. ஆனால் அவர் கேப்டன்சிக்காக உருவாக்கப்பட்டாரா? என்று பெரும்பாலும் என்னை நானே கேள்வி கேட்கிறேன். பெரும்பாலான நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர் நன்றாக செயல்படுகிறாரா? நானே கேள்வி கேட்கிறேன். அவரும் அந்த கேள்வியை கேட்க வேண்டும் என்றார் சோயப் அக்தர்.

இந்த உலகக் கோப்பையை வெல்லும் திறன் ரோஹித் சர்மாவுக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை. அவருக்குப் பின்னால் அவருடைய ரசிகர் கூட்டம் இருக்கிறது, அணியும் திறமையும் உள்ளது. நான் சொன்னதை தவறென்று நிரூபியுங்கள், எல்லாரையும் தவறென்று நிரூபியுங்கள் – அதைச் செய்ய அவருக்குத் திறமை இருக்கிறது என்று நான் நம்புகிறேன். ஆனால் 2013ல் இருந்து கோலியின் கீழும் கூட இந்தியாவின் கேப்டன்சி முடங்கிவிட்டதாக உணர்கிறேன். கோலி அதிகமாக ஆக்ரோஷமாக இருப்பார் ரோஹித் பீதியடைந்தார் என்றார் சோயப் அக்தர்.
விமர்சனங்கள் இருந்தபோதிலும், ரோஹித் தனது விமர்சகர்களை தவறாக நிரூபிப்பார் என்று அக்தர் விரும்பினார், ஆனால் தோனியின் ஆட்கள் 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்றதிலிருந்து இந்தியா ஆக்ரோஷத்திற்கும் அமைதிக்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்தத் தவறிவிட்டது என்று கூறினார்.



