கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். ஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

பொதுவாகவே ரசிகர்கள் மத்தியில் நிலவும் கருத்து என்னவென்றால் இந்தியா பேட்டிங் துறையிலலும் மறுபுறம் பாகிஸ்தான் பந்து வீச்சு துறையில் பலமான அணியாக எதிரணிகளை மிரட்டி வருகிறது. தற்சமயத்தில் இந்திய பேட்டிங் வரிசையில் காயமடைந்த வீரர்களால் மிடில் ஆர்டர் சற்று பலவீனமாக இருக்கிறது. அதே போல பேட்டிங் வரிசையில் ரோஹித் சர்மா, கில், விராட் கோலி என பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் வலது கை வீரர்களாக இருப்பது மற்றொரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களான நாசீம் ஷா, ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அப்ரிடி போன்ற தரமான வேகப்பந்து வீச்சு கண்டிப்பாக இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக 2021 டி20 உலகக்கோப்பை போல ஷாஹீன் அப்ரிடி புதிய பந்தை ஸ்விங் செய்து இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரிய சவாலை கொடுப்பார் என நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் விராட் கோலி இந்த விஷயம் குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “பாகிஸ்தான் அணிக்கு பலம் பவுலிங் என்று நான் கருதுகிறேன். குறிப்பாக போட்டியின் எந்த நேரத்திலும் வெற்றியை பறிக்கும் அளவுக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் சில தரமான பவுலர்கள் அவர்களிடம் இருக்கின்றனர். எனவே நல்ல நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்ட அவர்களை எதிர்கொள்ள உங்களுக்கு சிறந்த செயல்பாடு இருக்க வேண்டும்.
நான் என்னுடைய ஆட்டத்தை எப்படி முன்னேற்றலாம் என்பதை புரிந்துகொள்ள எப்போதுமே முயற்சி செய்கிறேன். அது தான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிற்சியிலும் நீண்ட காலமாக என்னுடைய அணிக்கு சிறப்பாக செயல்பட உதவி வருகிறது. நீங்கள் ஒரு சிறந்த நிலையை அடைந்த பின் மேற்கொண்டு தொடுவதற்கு எந்த நிர்ணயிக்கப்பட்ட சாதனைகளும் கிடையாது.

அதனால் சில சூழ்நிலையில் இருந்து எப்படி என்னுடைய அணியை வெற்றி பெற வைக்கலாம் என்பதே என்னுடைய மனநிலையாகும். அதற்காக ஒவ்வொரு நாளும் முன்னேறுவதற்கு நான் பயிற்சிகளை எடுத்து வருகிறேன் என்று கூறினார் விராட் கோலி. இந்த நிலையில் நாளை இந்தியா vs பாகிஸ்தான் போட்டி நடக்க இருக்கும் நிலையில் இந்த போட்டியில் யார் அசத்துவார் என்பது தெரிந்து விடும்.



