அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக்கோப்பை போட்டியானது வரும் அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த போட்டியானது தற்போது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவதினால் இந்திய இந்த போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இருக்கிறது. குறிப்பாக கடந்த 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.

இந்நிலையில் முன்னதாக டி20 போட்டிகளின் வருகையால் ஒருநாள் போட்டிகளின் தரம் குறைந்து வருவதாகவும் நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகிறார்கள். சில நட்சத்திர வீரர்களும் பணத்திற்காக டி20 கிரிக்கெட்டிலும் தரத்தை நிரூபிப்பதற்காக டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாடுவதை தேர்ந்தெடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்கு ஆர்வத்தை காட்டாமல் ஓய்வும் பெறுகிறார்கள். அதனால் அழிந்து வரும் ஒருநாள் போட்டிகளை பேசாமல் நிறுத்தி விடலாம் என ரவி சாஸ்திரி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அனைவரும் அழிந்து வருவதாக சொன்னாலும் ஒருநாள் போட்டிகள் தான் தமக்கு மிகவும் பிடித்தது என்று தெரிவிக்கும் விராட் கோலி அதுவே வீரர்களின் பல்வேறு திறமைகளை உண்மையாக சோதிக்கும் இடமாகவும் திகழ்வதாக கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடுவதை விரும்புகிறேன். மேலும் ஒருநாள் போட்டிகள் உங்களுடைய ஆட்டத்தை முழுவதுமாக சோதிக்கக்கூடிய இடம் என்று நினைக்கிறேன்”

குறிப்பாக அது டெக்னிக், பொறுமை, நுட்பம் அமைதி சூழ்நிலையை அறிந்து விளையாடுதல், பல்வேறு கட்டங்களில் வித்தியாசமாக விளையாடுவது போன்றவற்றில் உங்களை சோதிக்கிறது. எனவே பேட்ஸ்மேனை முழுமையாக சோதிக்கக்கூடிய ஒருநாள் போட்டிகள் தான் என்னுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன். ஏனெனில் அது சூழ்நிலைக்கேற்றார் போல் என்னுடைய அணியின் வெற்றிக்காக விளையாடும் சவாலை எனக்கு கொடுக்கிறது”

நானும் அதில் சிறந்து விளங்க முயற்சிக்கிறேன். எனவே ஏற்கனவே சொன்னது போல் ஒருநாள் போட்டிகள் அடிக்கடி என்னுடைய பேட்டிங் போன்ற பல்வேறு அம்சங்களில் சோதிப்பதற்கு உதவுகிறது. அதனால் நான் ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்கு எப்போதுமே விரும்புகிறேன் என்று கூறினார். அவர் கூறுவது போல டி20 கிரிக்கெட்டில் அசத்தும் சூரியகுமார் யாதவால் சற்று நிதானத்துடன் விளையாட வேண்டிய சூழ்நிலையில் அசத்த முடியாத அளவுக்கு ஒருநாள் போட்டிகள் சோதிப்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி கடந்த 2008 அண்டர்-19 உலக கோப்பையை வென்று ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாகி அதற்கு பின்னர் 15 வருடங்களாக அனைத்து டாப் பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு 275 போட்டிகளில் 12898 ரன்களை எடுத்துள்ளார். குறிப்பாக அதிவேகமாக 10,000 ரன்கள் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (49) உலக சாதனையை விரைவில் உடைப்பார் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது.



